செவ்வாய், 20 பிப்ரவரி, 2018

பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும்

“பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும்: மற்று
நிலையாமை காணப் படும்.” – 349


பொதுவாக இந்த குறளுக்கு விளக்கம் எந்த பற்றும் இல்லாமல் இருந்தால் இறைவனை காண முடியும் (அ) பிறப்பறுக்க முடியும் என்று சொல்ல படுகிறது. இது எந்த அளவிற்க்கு மிக சரியான கருத்தோ அதே அளவு இந்த குறளில் இருக்கும் இன்னொரு விஷயமும் மிகவும் முக்கியமானது. எதன் மூலமாக பிறப்பறுக்க முடியும் என்று சொல்கிறார்.ஆம், முன்பு பார்த்த குறளில் பிறவி பெருங்கடலை நீந்த இறைவன் அடியை சேர வேண்டும் என்று சொன்னவர் இந்த குறளில் பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் என்று சொல்வதன் மூலம் எது இறைவன் அடி என்றும் சொல்கிறார். பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் – ஆம், கண் வழி மூலமாகத்தான் நாம் இறைவனை அடைய முடியும் (அ) பிறப்பறுக்க முடியும். இதைத்தான் இறைவன் திருவடி என்றும் சொல்கிறார்.


ஏன் இங்கு பற்றற்ற கண்ணே என்று சொல்கிறார் என்று சிந்தித்தால் அதுதான் ஞான பாதை. கண்ணின் மகத்துவத்தை மேலும் அது எப்படி நம் உடம்பில் இருக்கிறது என்பதைத்தான் திருவள்ளுவர் வெளிபடுத்தியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் அதுதான் பிறப்பறுக்கும் என்று சொல்கிறார். ஏன் கண்ணை பற்றற்ற கண்ணே என்று சொல்கிறார்?
 
நமது கண் அமைப்பை நன்றாக பாருங்கள். வெள்ளை விழி – அதன் நடுவே கருவிழி – இந்த கருவிழியை தான் கருமை பெற்ற கடல் என்கிறார் திருஞான சம்பந்தர், வெள்ளை விழி தான் திருப்பாற்கடல் என்றார்கள் ஆழ்வார்கள். இந்த கருவிழியாகிய கருங்கடலிலே மிதக்கின்ற கலம் தான் நம் கண்மணி. எவ்வளவு ஒப்பற்ற உவமை இது. நம் கண்மணி வேறு எதையும் பற்றாமல் கருவிழியில் பிராணநீரில் மிதந்து கொண்டிருக்கிறது. இது தான் ஞான இரகசியம். தாயின் கருவினுள் சிசு பனிக்குடத்தில் இருப்பது போலவே கண்மணியும் “நீர் மேல் நெருப்பாக” மிதந்து கொண்டிருக்கிறது. கண்மணியின் மையம் ஊசிமுனை துவாரம் உள்ளது. அதனுள் ஊசிமுனை அளவு நெருப்பு. நம் கண்மணியின் மத்தியில் ஊசிமுனை அளவு ஒரு சிறு துவாரம் உள்ளது. இந்த துவாரத்தை துலங்கும் நம் ஜீவ ஒளியை நம் வினைகள் சூட்சுமத்தில் 7 திரையாக அமைந்து மூடியுள்ளது. இவ்வினைக்கு தகுந்தபடியே நம் மனம் வேலை செய்கிறது. நம் உடல் அமைப்பு, சுற்றம் போன்ற அனைத்தையும் நிர்ணயிப்பது இவ்வினைகள் தான். இவ்வினைகள் கண்ணாடி போல் உள்ளதால் நம்மால் பார்க்க முடிகிறது. கண் இல்லாதவர்களுக்கு இவ்வினை திரை சுவர் போல் அமைந்து உள்ளதால் பார்வை சக்தி அவர்களுக்கு இல்லை.

நம் கண்ணில் சூட்சமமாக உள்ள வினை திரையை நீங்கினால் தான் நம் கண் பற்றற்ற கண்ணாகும்.
இந்த வினை திரையை நீக்குவது எப்படி? அதற்கும் விடை அளிக்கிறார் வள்ளுவர் பெருந்தகை :
“பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு”
 
நாம் ஞான சற்குருவிடம் திருவடி தீட்சை பெற்று கண்களில் உணர்வு பெற்று தவம் செய்கையில் , மெய்ப்பொருளான நம் கண் சிவந்து செம்மையான கண்ணாகும். அதுவே செம்பொருள் என்கிறார் வள்ளுவர். அதாவது செம்பொருள் கைவல்யமானவரே பிறப்பை தவிர்பர். வினையை சுட்டெரிப்பர்
இதே போல மீதி உள்ள இந்த குறள்களை பார்த்தாலும் இதில் ஏன் வள்ளுவர் இத்தனை முறை சொல்கிறார் என்று பார்த்தாலும் இந்த இறைவன் திருவடி ஆன்மீகத்தில் எவ்வளவு முக்கியமானது என்பதை நிச்சயமாக புரிந்து கொள்ள முடியும்.


கீழே இருக்கும் இந்த குறளுக்கான விளக்கம் தெரிந்தால் போதும் அது நிச்சயமாக ஞான பாதைக்குள் நம்மை தள்ளும்....
ஞான சற்குரு சிவசெல்வராஜ் ஐயா.....


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts